திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வருகிற 10-ந் தேதி ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக திருவண்ணாமலையில் 2,420 பஸ்கள் நிற்கும் வகையில் 15 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் நகரினை இணைக்கும் 9 சாலைகளிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
தொடர்ந்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
24 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வகையில் 85 கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட உள்ளது. இவற்றில் 6 இடங்கள் இணையதளம் மூலம் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. தற்காலிக பஸ் நிலையம் மற்றும் கார் நிறுத்தும் இடங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் உணவகம், கழிப்பறைகள், விளக்குகள், மேற்கூரைகள், குடிநீர் வசதி, காவல் மையம் போன்றவை அமைக்கப்பட உள்ளது.
2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதைக்கு செல்ல மினி பஸ்கள் மற்றும் பள்ளி பஸ்கள் பயன்படுத்தபட உள்ளது. ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 14 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கடைசி நேரத்தில் பயணிகள் நெரிசல் தவிர்க்க விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக 650 சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 8,500 போலீசார் ஈடுபட உள்ளனர். மேலும் கோவிலுக்கு வெளியே மற்றும் உள்ளே கண்காணிப்பு பணிக்காக 350 கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது. பரணி தீபத்தின் போது 4 ஆயிரம் மற்றும் மகா தீபத்தின் போது 6 ஆயிரம் கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் அனுமதிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும். 12 தங்க நாணயம் மற்றும் 72 வெள்ளி நாணயம் துணிப்பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசாக அளிக்கப்பட உள்ளது. 2,500 பக்தர்களுக்கு மட்டும் மலை ஏறுவதற்காக அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு பரணி மற்றும் மகா தீபத்தின் போது சிலர் போலி பாஸ் வைத்து கொண்டு கோவிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எங்களிடம் எந்தவித புகார்களும் வரவில்லை. உரிய விசாரணை நடத்தி இந்தாண்டு அதுபோன்று நடைபெறாத வகையில் பார்த்து கொள்ளப்படும்.
மேலும் கோவிலில் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்து செல்ல இடைத்தரகர்கள் சிலர் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.