கலசபாக்கம் தாலுகா தென்மாதிமங்கலம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் கலசபாக்கம் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.54 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் மூலம் மாவட்டம் முழுவதும் சுகாதார மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகக் குறைவாகவும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளப்பட்டது.
பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு பிறகு திருமணம் செய்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். ஆண்களை வளர்ப்பது போல் பெண்களையும் நாம் சமமாக வளர்க்க வேண்டும். நமது கலாசாரத்தை அனைவரும் காக்க வேண்டும். முதியோர்களை நீங்கள் எப்படி பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறீர்களோ, அது போல் தான் உங்களையும் முதுமை காலத்தில் உங்கள் பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள். உங்களுக்கு ஆரம்ப வாழ்க்கையை கொடுத்தவர்கள் உங்கள் பெற்றோர்கள். இவ்வாறு அவர் பேசினார்.