திருவண்ணாமலை தீபத் திருவிழா: 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2700 சிறப்புப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா காண தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவர். அத்துடன், இந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி பௌர்ணமியும் வரவுள்ளது. இந்த ஆண்டு, இரண்டு சிறப்பு தினங்கள் தொடர்ந்து வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

எனவே, பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. மேலும், பக்தர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை குறிப்பிட்டுள்ளது.

 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் நிறைவாக, டிசம்பர் 6 ஆம் தேதி மகா தீப பெருவிழா நடைபெற உள்ளது.