பொறியியல் சேர்க்கைக்கான 3ம் சுற்று கலந்தாய்வு நிறைவில் 90,201 இடங்கள் நிரம்பின..துணைக் கலந்தாய்வு செப். 6ல் தொடக்கம்!

பொறியியல் சேர்க்கைக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு நிறைவில் 90,201 இடங்கள் நிரம்பியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளின்கீழ் 1 லட்சத்து 60,780 இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. அதில் 775 இடங்கள் நிரம்பின.

இதையடுத்து, பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு போன்ற பிரிவுகளுக்கான கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்பட்டன. முதல் சுற்று கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி முதல் கடந்த மாதம் 9-ம் தேதி வரை நடந்தது. அதன் பின்னர் 2-வது சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கி 22-ம் தேதியுடன் முடிந்தது.

நிறைவாக மூன்றாவது சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 22-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. அந்த வகையில் 3 சுற்றுக் கலந்தாய்வு முடிவில், பொது பிரிவில் 95,046 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் கடந்த மாதம் 31-ம் தேதி வரை 80,951 இடங்களில் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுப் பிரிவில் 11,058 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவர்களில் கடந்த 31-ம் தேதி வரை 8,475 பேர், தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர்ந்துள்ளனனர். இந்த 7.5 சதவீத ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே செலுத்திவிடும்.

மொத்தமாக நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 1 லட்சத்து 60,780 இடங்களில், 90,201 இடங்கள் நிரம்பி இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக துணைக் கலந்தாய்வு வரும் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.