சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த மன்மத தகன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடந்த 5ஆம் தேதி தொடங்கிய சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு நாளான நேற்றுடன்(15.05.2022)சிறப்பாக நடந்து முடிந்தது.
விழா நாட்களில் மகிழ மரம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வலம் வந்து பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலின் மூன்றாம் பிராகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடி மரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து தன் மீது அம்பு எய்த மன்மதனை அருணாச்சலேஸ்வரர் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக 20 அடி உயரம் கொண்ட மன்மத பொம்மை கையில் வில்லோடு அருணாச்சலேஸ்வரர் முன்பு நிறுத்தப்பட்டது. அப்போது மன்மதனை அருணாச்சலேஸ்வரர் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கும் நிகழ்வு நடந்தேறியது. அருணாச்சலேஸ்வரர் முன்பிருந்து சீரிப்பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பட்டு கொழுந்து விட்டு எரிந்தது.