Karthigai Maha Deepam 2020 : Maha Deepam lit on the mountain peak in Tiruvannamalai Arunachaleswarar temple

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10.11.2021 புதன்கிழமை விடியற் காலை 06.30 மணிக்கு மேல் 07.25 மணிக்குள் விருச்சக லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 16.11.2021 செவ்வாய்கிழமை காலை அன்று 7-ம் நாள் திருவிழா பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 10-ம் நாள் திருவிழா விடியற்காலை 4 மணிக்கு கோயில் கருவறைக்குள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

இதையொட்டி கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்துவது சம்மந்தமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (01.11.2021) மாலை நடைபெற்றது.

அவர்களுடன் ஆலோசித்த பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் கூட்டத்தில் பேசியதாவது¸

சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு 10.11.2021 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து 19.11.2021 அன்று காலை 04.00 மணிக்கு பரணி தீபம்¸ மாலை 06.00 மணிக்கு மகா தீபம் தரிசனம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தற்போது கோவிட்-19¸ கொரோனா தொற்று பரவல் காரணமாக¸ அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி¸ கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு¸ தீபத்திருவிழாவில் சமூக இடைவெளியினை பின்பற்றி நாள் ஒன்றுக்கு 10¸000 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள் அனுமதி அளிக்கப்படும். பக்தர்களுக்கு குடிநீர்¸ சுகாதாரத் துறை மருத்துவக் குழு¸ நடமாடும் மருத்துவ வாகனம்¸ காவல் துறை பாதுகாப்பு¸ தூய்மை பணிகள் மேற்கொள்வது உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.

கார்த்திகை தீப பிரமோற்சவம் நடைபெறும்¸ நாட்களில்¸ சுவாமி அபிஷேகம் மற்றும் திருஉலா புறப்பாடு நேரங்கள் தவிர்த்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக 07.11.2021 முதல் 17.11.2021 முடிய மற்றும் 21.11.2021 முதல் 23.11.2021 முடிய நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்கள் காலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

19.11.2021 அன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் நடைபெறும் நாளினை தவிர¸ ஆன்லைன் மூலம் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்ய வரும் 10¸000 பக்தர்களில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும்¸ ஏனைய மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விகிதாச்சாரத்தின்படி பிரித்து அனுமதிக்கப்படுவார்கள்.

கார்த்திகை தீபத் திருவிழா நிகழ்வுகள் அனைத்து தொலைக்காட்சிகள்¸ உள்ளுர் கேபிள் டிவிக்கள்¸ திருக்கோயில் நிர்வாகம் மூலம் யூ டியூப் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பொதுமக்கள் கோவிட்-19 நோய் தொற்று பரவாமல் தடுக்க இந்த ஆண்டு மேற்கண்ட கட்டுப்பாடுகளுடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடத்தப்படுகிறது.