திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி அருகே உள்ள சி. ஆண்டாப்பட்டு கிராமத்தில் பாறை கல்வெட்டு கண்டெடுப்பு!

திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி அருகே உள்ள சி. ஆண்டாப்பட்டு கிராமத்தில் நிலத்தில் உள்ள பாறையில் கல்வெட்டு இருப்பதை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த தண்டராம்பட்டு ஸ்ரீதர் மற்றும் பழனிச்சாமி ஆகியோர்கள் கண்டறிந்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வு பணிகளின் போது தானிப்பாடி அடுத்த சி ஆண்டாப்பட்டு கிராமத்தில் உயரமான பாறையில் சுமார் 10 அடி நீளத்தில் கல்வெட்டு இருப்பது தெரியவந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு 13 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் வெட்டப்பட்டது என்றும் இது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிலம் தானம் பற்றியது என்று அறியவந்தது.

இக்கல்வெட்டைப் படித்தளித்த கல்வெட்டியல் அறிஞர் சு. இராஜகோபால் அவர்கள்,
திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோமாற பன்மரான ஸ்ரீவல்லப பாண்டியணின் ஆட்சிக்காலத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள மெய்குன்ற நாடு மற்றும் நரிப்பள்ளி நாடு பகுதியில் உள்ள திருவண்ணாமலை உடைய நாயனார்க்கு அதாவது அண்ணாமலையாருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பழந்தேவதானமான ஆண்டார்பட்டு நிலம் நெடு நாட்களாக, புலையர்கள் வழியில் உள்ள நிலத்தை கோயில் பணியாளரான கண்ணாரமுதப்பெருமாளான திருச்சிற்றம்பல நம்பி பொன் மல்லப்பனுக்கு பெருமாளும் மல்லப்பதென்னாயக்கரும் கோயில் தானத்தாரும் அனைத்து வரிகளும் உட்பட காணியாக நிலம் கொடுத்ததைப் பற்றிய செய்தி வெட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கல்வெட்டில் தற்போது ஆண்டாப்பட்டு என்று வழங்கப்படும் ஊரின் பெயர் ஆண்டார்பட்டு என்று அறியப்படுகிறது. இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட பாறையின் வலதுபுறம் சூரியன் சந்திரன் இதனுடன் திருவண்ணாமலை மலையைக்குறிக்கும் முக்கோண குறியீடு ஆகியவையும் வெட்டப்பட்டுள்ளது. இது போன்ற மலையைக் குறிக்கும் முக்கோண குறியீடு கொண்ட கல்வெட்டுகள் திருவண்ணாமலையைச் சுற்றி சுமார் 60 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் காணக்கிடைக்கின்றன. இந்த செய்தி மூலம் திருவண்ணாமலை கோயில் வழிபாட்டிற்கும் வளர்ச்சிக்கும் சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து நிலத்தின் மூலம் தானம் கிடைத்துள்ளது என்பது அறியப்படுகிறது.

திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி அருகே உள்ள சி. ஆண்டாப்பட்டு கிராமத்தில் பாறை கல்வெட்டு கண்டெடுப்பு!
திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி அருகே உள்ள சி. ஆண்டாப்பட்டு கிராமத்தில் பாறை கல்வெட்டு கண்டெடுப்பு!