தமிழகத்தில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 30 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறும் என்றும், இக்காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அடுத்த 2024 ஜன.1-ம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலி்ல் சேர்ப்பதை அடிப்படையாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுவீடாக வந்து வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை மேற்கொள்வார்கள். அதன்பின், ஆகஸ்ட் 22 முதல் செப். 29-ம் தேதி வரை, வாக்குச் சாவடிகளை திருத்தியமைத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல். வாக்காளர் பட்டியலிலுள்ள மங்கலான, மோசமான, தரமற்ற, படங்களை மாற்றுதல், பிரிவு அல்லது பகுதிகள், வாக்குச்சாவடி எல்லைகள் மறு சீரமைப்பு, இடைவெளிகளைக் கண்டறிதல் மற்றும் அத்தகைய இடைவெளிகளைக் குறைப்பதற்கான உத்திகளையும் காலக்கெடுவையும் இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.

வரைவு வாக்காளர் பட்டியல்: இதையடுத்து அக்.17-ல் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்றிலிருந்து நவ.30 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீது வரும் டிசம்பர் 26ம் தேதிக்குள் தீர்வு காணப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு அதாவது 2024ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளின் போது தகுதியான வாக்காளர்கள் பெயர்களை சேர்க்கலாம். அல்லது, பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம், ஆதார் எண் இணைப்பு ஆகியவற்றுககு படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

விண்ணப்பங்களை அலுவலக நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் அளிக்கலாம் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 25 வயதுக்குக் கீழுள்ள மனுதாரர்கள் வயதுச்சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் “வாக்காளர் உதவி” கைபேசி செயலி (VOTER HELPLINE Mobile App) ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.