நற்செய்தி!....   முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத்  திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
  • முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அதிக சிகிச்சை வசதியுடன் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், தமிழக அரசு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவத் திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. தற்போது செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இம்மாதம் முடிவு பெறுகிறது.
  • இந்நிலையில், ஏழை எளிய மக்கள் கூடுதல் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு 16.12.2021 அன்று அரசாணை வெளியிட்டது.
  • அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று, (10-ம் தேதி) சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 11.1.2022 முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு (பொதுத்துறை நிறுவனம்) அதற்கான ஆணையை வழங்கினார்.
  • இத்திட்டத்தின் மூலம் 11 தொடர் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள் மற்றும் 8 உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 1,090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட 714 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 886 தனியார் ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 1,600 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று பயன்பெறலாம்.
  • அத்துடன் 86 கூடுதல் சிகிச்சை முறைகள் தற்போது செயல்படுத்தப்படும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 1.37 கோடி குடும்பங்கள் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டு வசதி பெற முடியும்.