விடாமுயற்சி, கடின உழைப்பும் தான் உண்மையான வெற்றியின் அளவுகோல்: மத்திய ரயில்வே பணியில் சேர்ந்து சாதித்த திரு.லோகேஷ்!

விடாமுயற்சியும், கடின உழைப்பும் தான் உண்மையான வெற்றிக்கான அடிப்படை என சாதனை படைத்துள்ளார் நமது தேவிகாபுரத்தைச் சேர்ந்த  திரு.லோகேஷ். இந்த இளைஞன், வறுமை மற்றும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும், 5 ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து, தளராத விடாமுயற்சியுடன் தனது இலக்கை அடைந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் பகுதியைச் சேர்ந்த திரு.லோகேஷ், நெசவாளர் திரு.ஞானசேகர் மற்றும் திருமதி.பாக்யலட்சுமி தம்பதியரின் மகன் ஆவார். வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், கல்வியும், மன உறுதியும் எந்தத் தடையையும் தாண்டிச் செல்லும் என்பதை இன்று லோகேஷ் நிரூபித்து காட்டியுள்ளார்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ மற்றும் அரசியல் அறிவியலில் பிஏ பட்டம் பெற்ற இவர் தனது விடாமுயற்சியை கைவிடாமல் 5 வருடங்கள் தொடர்ந்து முயற்சி செய்து மத்திய ரயில்வே பணியில் சேர்ந்து சாதித்து இருக்கிறார்

அவரது தன்னம்பிக்கைதான் அவரை உண்மையிலேயே மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது. சமீபத்திய இந்த வீடியோவில், லோகேஷ் வெற்றியை அடைவதற்கான மூன்று முக்கிய கூறுகளைப் பகிர்ந்து கொண்டார் – உறுதிப்பாடு, கவனம் மற்றும் விடாமுயற்சி. இந்த குணங்கள் அவரது சொந்த வாழ்க்கையில் அவருக்கு உறுதுணையாக இருந்தது என கூறுகிறார், மேலும் அவர் தனது அடிச்சுவடுகளைப் பின்பற்ற மற்றவர்களை ஊக்குவிக்க விரும்புகிறார் .

Tvmalai.in லோகேஷின் சாதனைகளுக்காகவும், நம் அனைவருக்கும் உத்வேகமாக இருப்பதற்கும் அவரை வாழ்த்த விரும்புகிறது! கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை நினைவூட்டுவது இவரைப் போன்ற நபர்கள்தான்.