தமிழக சமூக பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவியில், 16 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்வு ஜூன் 19 காலை மற்றும் பிற்பகலில் கணினி வழியே நடக்கும். தேர்வில் பங்கேற்க ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு துவங்கி விட்டது. வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு மையங்கள்
தேர்வுக்கு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும், தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
தேர்வில் பங்கேற்க
இளநிலை பட்டப் படிப்பில், சமூகவியல், சமூக பணி, உளவியல், குழந்தைகள் மேம்பாடு அல்லது குற்றவியல் ஆகியவற்றில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம்
தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறுவோருக்கு, குறைந்தபட்சம், 56 ஆயிரத்து 100 ரூபாய் முதல் அதிகபட்சம் 2.05 லட்சம் ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் இட ஒதுக்கீட்டு பிரிவினர், இந்த ஆண்டு ஜூலை 1 கணக்கின்படி, 60 வயதை எட்டியிருக்கக் கூடாது. இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினருக்கு 32 வயது நிறைந்திருக்கக் கூடாது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில் அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் மட்டும், கணினி வழியில் இதுவரை நடத்தப்பட்டது
.முதல் முறையாக அரசு பதவிக்கான கணினி வழி போட்டி தேர்வு, பரீட்சார்த்த முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் வெற்றியை பொறுத்து, அடுத்தடுத்த தேர்வுகள் கணினி வழி தேர்வாக நடத்தப்பட உள்ளன. கூடுதல் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.