மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் கார்டு செல்லாது!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கார்டுதாரர்கள் தாமதிக்காமல் உடனே இணைக்கும்படி வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

வருமான வரிச் சட்டம், 1961ன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் கார்டுதாரர்களும் 31.03.2023 தேதிக்கு முன்னர் தங்களது பான் கார்டை ஆதாருடன் கட்டாயம் இணைக்கவேண்டும் மற்றும் 01.04.2023 முதல் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையொட்டி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கூறியதாவது:-

நமது நாட்டில் இதுவரை 61 கோடி தனிநபர் பான் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 48 கோடி தனி நபர் பான் எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு விட்டன. விதிவிலக்கு பெற்ற பிரிவினர் உள்பட 13 கோடி பேர் இணைக்கவில்லை. விதிவிலக்கு பிரிவினர் தவிர்த்து அனைவரும் குறிப்பிட்ட தேதிக்குள் (மார்ச் 31-ம் தேதி) இணைத்துவிடுவார்கள் என்று நம்புகிறோம்.

இணைக்காதவர்கள் பல்வேறு வணிக நடவடிக்கைகளை, வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்கிறபோது பலன் பெற மாட்டார்கள். பட்ஜெட்டில் அறிவித்தபடி பான் அட்டையை பொதுவான அடையாள அட்டையாக ஆக்குவதன் மூலம் தொழில் துறையினர் பலன் அடைய முடியும்.