சபரிமலையில்  பம்பையில் நீராட அனுமதி; மேலும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

சபரிமலையில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு பம்பை நதியில் பக்தர்கள் நீராட அனுமதி உட்பட பல்வேறு தளர்வுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.

சன்னிதானத்தில் பக்தர்களுக்கு இரவு தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக தேவசம் போர்டின் தங்கும் விடுதிகளில் 500 அறைகள் தயார் நிலையில் உள்ளது.பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சன்னிதானத்தில் செல்லும் பாரம்பரிய வன பாதை நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பாதை வழியாக மலை ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் நீலிமலை, அப்பாச்சி மேடு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் அவசர சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளன.

டிசம்பர் 26ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். பிறகு டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2022ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும்.