பொங்கல் பரிசுத்தொகுப்பு: தமிழகம் முழுவதும் நாளை முதல் டோக்கன்கள் விநியோகம்..!!

தமிழகம் முழுவதும் நாளை (27.12.2022) முதல் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்களால் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஏழை-எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை வரும் ஜனவரி 2ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதேநாளில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மூலம் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். அதேபோல், பொங்கல் பண்டிகைக்கான ரூ.1000, பச்சரிசி மற்றும் சர்க்கரை பெறவும் ஸ்மார்ட் கார்டுடன் கைரேகை பதிவு செய்யப்பட உள்ளது. இவை பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்குவதில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது. தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எந்த தேதியில், எந்த தெருவில் உள்ளவர்கள் தொகுப்பை பெற வேண்டுமென டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பொங்கல் பரிசு தொகை பெறும் நாள், நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு வீடாக இதனை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள். அந்த நாளில் கடைகளில் நெரிசல் இல்லாமல் பணத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (27.12.2022) மற்றும் நாளை மறுநாள் (28.12.2022) வீடுகளுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது.