தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.1,253 கோடி வருவாய் ஈட்டியுள்ளது – அஞ்சல்துறை தலைவர் தகவல்!

தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1,253.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அதன் முதன்மை அஞ்சல்துறை தலைவர் ஜெ.சாருகேசி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்திய அஞ்சல்துறை, ஐக்கியஅஞ்சல் ஒன்றியம் 1874-ல் நிறுவப்பட்டதன் நினைவாக நேற்று (09.10.2023) முதல் வரும் 15-ம் தேதி வரை அஞ்சல் வாரமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. ‘நம்பிக்கையோடு ஒன்றிணைவோம்’ என்பதே இந்த ஆண்டுக்கான உலக அஞ்சல் தின கருப்பொருளாகும். அஞ்சல் வாரத்தை முன்னிட்டு வரும் 13-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெறும்.

இதன்படி,

  • அக்.10-ம் தேதி நிதி அதிகாரமளிப்பு தினத்தை முன்னிட்டு அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வும்,
  • அக்.11-ம் தேதி அஞ்சல்தலை சேகரிப்பு தினத்தன்று அஞ்சல்தலை சேகரிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியிலும்,
  • அக்.12-ம் தேதி அஞ்சல் மற்றும் பார்சல் தினத்தன்று வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி அவர்களுக்கு அஞ்சல்துறையின் புதிய சேவைகள் குறித்தும்,
  • அக்.13-ம் தேதி அந்தியோதயா தினத்தன்று மக்களுக்கு அஞ்சல்துறை குறைந்த செலவில் வழங்கப்படும் சேவைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை பார்சல் சேவை, அஞ்சல் சேவைஉள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம்,கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 1,253.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.8 சதவீதம் அதிகம்.