திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா2021 :   அண்ணாமலையார் கோயிலில்  மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்  நிறைவு நாளான இன்று(19.11.2021) மாலை திருக்கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம்  ஏற்றப்பட்டது  .  அப்போது அண்ணாமலையாருக்கு 'அரோகரா' என்ற பக்தர்களின் பக்தி முழக்கம் விண்ணை முட்டியது.

நினைக்க முக்தி தரும் தலமாக வீற்றிருக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கார்த்திகைத் தீபத் திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. பின்னர், கோயில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கடந்த 1-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. 63 நாயன்மார்கள், வெள்ளித் தேரோட்டம், மகா தேரோட்டம் மற்றும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலா வந்தனர்.

5.9 அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட இந்த மகா தீப கொப்பரையானது பஞ்சலோகத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று அடுக்குகளாக செய்யப்பட்டது. மகாதீப கொப்பரையில் ஆன்மீக பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் 3,500 லிட்டர் நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி இந்த மகா தீபம்  ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் என 20 ஆயிரம் பக்தர்களை மட்டுமே கிரிவலத்திற்கு அனுமதிக்க முடியும் என்றும், அவர்கள் மலை மீது ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.