நகர்புற உள்ளாட்சி தேர்தல்: திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 3¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 3¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்கள் பட்டியல் குறித்த தகவலை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி, திருவத்திபுரம் ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. அதில் திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகளில் 67,321 ஆண் வாக்காளர்களும், 73,363 பெண் வாக்காளர்களும் 12 இதர வாக்காளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 696 வாக்காளர்கள் உள்ளனர். அனைத்து நகராட்சிகளையும் சேர்த்து 123 வார்டுகளில் 1,21,117 ஆண் வாக்காளர்களும், 1,32,344 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 20 பேர் என மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 481 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில், செங்கம், புதுப்பாளையம், போளூர், கண்ணமங்கலம், களம்பூர், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் என மொத்தம் 10 பேரூராட்சிகளில் 150 வார்டுகள் உள்ளன. அதில் 58,827 ஆண் வாக்காளர்களும், 64,073 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 22 ஆயிரத்து 905 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகள் அனைத்தையும் சேர்த்து மொத்தம் 273 வார்டுகளில் 1,79,944 ஆண் வாக்காளர்களும், 1,96,417 பெண் வாக்காளர்களும், 25 இதர வாக்காளர்களும் என மொத்தம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 386 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. அதில் ஆண் வாக்காளர்கள் 67,321. பெண் வாக்காளர்கள் 73,363, திருநங்கைகள் 12, மொத்த வாக்காளர்கள் 1,40,696.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் வெளியிட்டார். அதில், பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஆண் வாக்காளர்கள் 5 ஆயிரத்து 671 பேரும், பெண் வாக்காளர்கள் 6 ஆயிரத்து 190 பேரும் என மொத்தம் 11 ஆயிரத்து 861 பேர் உள்ளனர்.

போளூர்

மொத்த வாக்காளர்கள் 21 ஆயிரத்து 599 பேர் உள்ளனர். நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் அல்லது புதியதாக சேர்க்க விரும்பினால் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ மற்றும் தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தவாசி

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் வரைவு பட்டியலை நகராட்சி ஆணையர் ப்ரித்தி வெளியிட்டார். அதில், ஆண் வாக்காளர்கள் 12 ஆயிரத்து 727 பேரும், பெண் வாக்காளர்கள் 13 ஆயிரத்து 826 பேரும் என மொத்தம் 26 ஆயிரத்து 553 பேர் உள்ளனர்.

ஆரணி

ஆரணி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 28 ஆயிரத்து 324 பெண் வாக்காளர்களும், 25 ஆயிரத்து 740 ஆண் வாக்காளர்களும், திருநங்கைகள் 7 பேர் என மொத்தம் 54 ஆயிரத்து 71 பேரும் நகர்மன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.